Friday, July 1, 2011

பின்நவீனத்துவம்

பின்நவீனத்துவம் (post modernism) என்பது 21ஆம் நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு வருகிறது, அப்படின்னா என்னன்னு கொஞ்சம் பார்க்கலாம்.

இதுல 3 பிரிவு இருக்கு
1. கட்டவிழ்ப்பு (De-construction)
2. ஆசிரியரின் மரணம்
3. மையம்-விளிம்பு (center-margin)

கட்டவிழ்ப்பு:

ஆளும்வர்க்கம் இந்த சமூகத்தில் பல விதமான கருத்துக்களை தன் சுயநலத்திற்காக கட்டி வைத்திருக்கிறது, அவற்றை எல்லாம் தோலுரித்துக்காட்டுவதுதான் கட்டவிழ்ப்பு. அதாவது,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

பொருள்: ஒரு பெண் தெய்வத்தை வணங்கவில்லை என்றாலும் கனவனை மட்டும் வணங்கி வருவாளேயானால் அவள் பெய் என்று சொன்னால் மழையும் பெய்யும்.
இதை நாம் கட்டவிழ்ப்பு செய்து பார்ப்போம்: திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.பி.2. அது ஒரு நிலவுடைமை சமுதாயம், அதில் பெண் உட்பட, நிலம், ஆடு, மாடு அனைத்தும் உடைமைப்பொருள் (நிலவுடைமையாளருக்கு இவை சொந்தமாக இருக்கும்) ஆனால், பெண் என்பவள் சுயமரியாதை உள்ளவள், அவளை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்றால், அதாவது கனவனுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்றால், கனவனை மட்டும் தொழ வேண்டும் என்ற கருத்தை கட்டியமைக்க வேண்டும். அப்படி தொழதெழுபவள் பெய் என்று சொன்னால் மழயும் பெய்யும் என்ற கருத்தும், அவள் தெய்வத்தை விட மேலானவள் என்ற கருத்தும் சமூகத்தால் கட்டியமைக்கப்படுகிறது.. பெண் அடிமைத்தனம் சட்டமாக இருந்திருந்தால் என்றோ தூள்தூளாகியிருக்கும், ஆனால் இங்கே ஒழுக்கமாக, அது அவர்களின் சிறப்பாக கட்டியமைக்கப்படுகிறது

இதற்கு பெயர்தான் கட்டவிழ்ப்பு செய்தல். இப்படி ஒவ்வொரு கருத்தையும் எடுத்துக்கொண்டு நாம் கட்டவிழ்ப்பு செய்யலாம். நீங்கள் கட்டவிழ்ப்பு செய்ய சில கருத்துக்கள்
உழைப்பே உயர்வு தரும் (ஒருவரின் உழைப்பு இன்னொருவருக்கு உயர்வு)
சிக்கண வாழ்வே சிறந்த வாழ்வு (தன் குடும்பத்துக்கு மட்டுமே 27 மாடி கொண்ட வீடு கட்டிகொண்ட அம்பானிக்கு இது பொருந்துமா?)
கடமையை செய் பலனை எதிர்பாராதே (கடமை நமக்கு பலன் அவாளுக்கு)
செய்யும் தொழிலே தெய்வம் (கோயிலில் பூசை போடுபவனுக்கு அவன் தொழில் தெய்வம், பீ அள்ளுபவனுக்கு.....)

ஆசிரியனின் மரணம்:

ஒரு கட்டூரை எழுதி முடிக்கப்பட்டதும் அதை எழுதியவனும் இறந்து விடுகிறான். படைப்பை (கலைகள்) மட்டும் பார், படைத்தவனை (கடவுள் இல்லைங்க, படைப்பாளி) பார்க்காதே என்பதே இதன் பொருள். ஏனென்றால், ஒவ்வொரு கருத்துக்கும் பல கோணங்கள் உண்டு, அவற்றை ஏற்கனவே நாம் கட்டவிழ்ப்பின் மூலம் புரிந்து கொண்டுள்ளோம். ஒருவர் “படி” என்று எழுதியிருப்பதை, மாணவன் ஒருவன் பார்த்தால் “தேர்வுக்கு படி” என்றும், வியாபாரி “ஓர் அளவை” என்றும், மேஸ்திரி “மாடிப்படி” என்றும்தான் பொருள் கொள்வர். எனவே, உண்மை ஒன்றல்ல, பல. படைத்தவன் என்ன பொருளில் எழுதினானோ அதே பொருளில் அது படிக்கப்படுவதுமில்லை, புரிந்துகொள்ளப்படுவதுமில்லை. இதுதான் ஆசிரியனின் மரணம் எனப்படுகிறது.

மையம்-விளிம்பு:

இவை இரண்டும் எதிர் எதிர் கூறுகள். மையம் என்பது ஆதிக்கம் செலுத்தும் இடம், விளிம்புநிலை அந்த ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் இடம்.

ஆண்-பெண்
முதலாளி-தொழிலாளி
ஆளும் வர்க்கம்-ஆளப்படும் வர்க்கம்

இவற்றில், இடது புறம் உள்ளவற்றை மையம் என்றும், வலது புறம் உள்ளவற்றை விளிம்புநிலை என்றும் சொல்லலாம்.

விளிம்புநிலையை மையத்துடன் சமப்படுத்துவதே நம் வேலை, எனவே இதில் மையத்தை தகர்க்காமல் அதை செய்ய முடியாது. விளிம்புநிலைக்கு உதவ வேண்டும் என்றால், மையத்தை தகர்க்க வேண்டும்.

பெண்ணடிமைத்தனம் ஒழியவேண்டுமா, ஆணாதிக்கம் தகர்க்கப்பட வேண்டும்.
தொழிலாளி விடுதலை அடைய முதலாளி(த்துவம்) தகர்க்கப்பட வேண்டும்
ஆளப்படும் வர்க்கம் விடுதலை அடைய ஆளும் வர்க்கம் தகர்க்கப்பட வேண்டும்.
தலித் மக்கள் விடுதலை அடைய பார்ப்பனியம் தகர்க்கப்பட வேண்டும்.

மையத்தை தகர்த்து விளிம்பு நிலையை உயர்த்துவதே இதன் அடிப்படை

ஆதிகாலம் தொட்டு இன்றைய 20ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்துள்ள அனத்தையும் கேள்விக்குட்படுத்துவதுதான் இதன் சாரம்.

ஒரு சிலர் மையத்தை தகர்க்கிறேன் என்று, அதாவது, நீங்கள் உண்மையே பேச வேண்டும் என்கிறீர்களா, நாங்கள் பொய் பேசுவோம் என்கிறார்கள். நீங்கள் நாகரிகமாக நடக்க வேண்டும் என்கிறீர்களா நாங்கள் அநாகரிகமாக நடந்து கொள்வோம் என்கிறார்கள்.

உண்மை-பொய்
நாகரிகம்-அநாகரிகம்
திருடாமை-திருடுதல்

இவற்றை எதிரெதிர் கூற்களாக்கி இடது புறம் இருப்பதை மையம் என்றும், வலதுபுறம் இருப்பதை விளிம்புநிலை என்றும் புரிந்து கொண்டு மையத்தை தகர்க்கிறேன் என்றும் சொல்கிறார்கள். இது பின்நவீனத்துவம் ஆகாது.

எந்த தத்துவமும் மனித குலத்துக்கு நன்மை செய்வதற்காகவே தோன்றியவையே. பின்நவீனத்துவமும் அப்படியே. ஆனால், சிலர் இதை தவறாக திரித்து கூறுகிறார்கள்.
பின்நவீனத்துவத்தை புரிந்துகொள்ள கட்டவிழ்ப்பு, ஆசிரியனின் மரணம், மையம்-விளிம்பு ஆகியவை அடிப்படையானவை.

உதவிய புத்தகங்கள்:
பின்நவீனத்துவன் என்றால் என்ன?- எம்.ஜி.சுரேஷ்
பின்னை நவீனத்துவம்