Friday, July 1, 2011

பின்நவீனத்துவம்

பின்நவீனத்துவம் (post modernism) என்பது 21ஆம் நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு வருகிறது, அப்படின்னா என்னன்னு கொஞ்சம் பார்க்கலாம்.

இதுல 3 பிரிவு இருக்கு
1. கட்டவிழ்ப்பு (De-construction)
2. ஆசிரியரின் மரணம்
3. மையம்-விளிம்பு (center-margin)

கட்டவிழ்ப்பு:

ஆளும்வர்க்கம் இந்த சமூகத்தில் பல விதமான கருத்துக்களை தன் சுயநலத்திற்காக கட்டி வைத்திருக்கிறது, அவற்றை எல்லாம் தோலுரித்துக்காட்டுவதுதான் கட்டவிழ்ப்பு. அதாவது,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

பொருள்: ஒரு பெண் தெய்வத்தை வணங்கவில்லை என்றாலும் கனவனை மட்டும் வணங்கி வருவாளேயானால் அவள் பெய் என்று சொன்னால் மழையும் பெய்யும்.
இதை நாம் கட்டவிழ்ப்பு செய்து பார்ப்போம்: திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.பி.2. அது ஒரு நிலவுடைமை சமுதாயம், அதில் பெண் உட்பட, நிலம், ஆடு, மாடு அனைத்தும் உடைமைப்பொருள் (நிலவுடைமையாளருக்கு இவை சொந்தமாக இருக்கும்) ஆனால், பெண் என்பவள் சுயமரியாதை உள்ளவள், அவளை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்றால், அதாவது கனவனுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்றால், கனவனை மட்டும் தொழ வேண்டும் என்ற கருத்தை கட்டியமைக்க வேண்டும். அப்படி தொழதெழுபவள் பெய் என்று சொன்னால் மழயும் பெய்யும் என்ற கருத்தும், அவள் தெய்வத்தை விட மேலானவள் என்ற கருத்தும் சமூகத்தால் கட்டியமைக்கப்படுகிறது.. பெண் அடிமைத்தனம் சட்டமாக இருந்திருந்தால் என்றோ தூள்தூளாகியிருக்கும், ஆனால் இங்கே ஒழுக்கமாக, அது அவர்களின் சிறப்பாக கட்டியமைக்கப்படுகிறது

இதற்கு பெயர்தான் கட்டவிழ்ப்பு செய்தல். இப்படி ஒவ்வொரு கருத்தையும் எடுத்துக்கொண்டு நாம் கட்டவிழ்ப்பு செய்யலாம். நீங்கள் கட்டவிழ்ப்பு செய்ய சில கருத்துக்கள்
உழைப்பே உயர்வு தரும் (ஒருவரின் உழைப்பு இன்னொருவருக்கு உயர்வு)
சிக்கண வாழ்வே சிறந்த வாழ்வு (தன் குடும்பத்துக்கு மட்டுமே 27 மாடி கொண்ட வீடு கட்டிகொண்ட அம்பானிக்கு இது பொருந்துமா?)
கடமையை செய் பலனை எதிர்பாராதே (கடமை நமக்கு பலன் அவாளுக்கு)
செய்யும் தொழிலே தெய்வம் (கோயிலில் பூசை போடுபவனுக்கு அவன் தொழில் தெய்வம், பீ அள்ளுபவனுக்கு.....)

ஆசிரியனின் மரணம்:

ஒரு கட்டூரை எழுதி முடிக்கப்பட்டதும் அதை எழுதியவனும் இறந்து விடுகிறான். படைப்பை (கலைகள்) மட்டும் பார், படைத்தவனை (கடவுள் இல்லைங்க, படைப்பாளி) பார்க்காதே என்பதே இதன் பொருள். ஏனென்றால், ஒவ்வொரு கருத்துக்கும் பல கோணங்கள் உண்டு, அவற்றை ஏற்கனவே நாம் கட்டவிழ்ப்பின் மூலம் புரிந்து கொண்டுள்ளோம். ஒருவர் “படி” என்று எழுதியிருப்பதை, மாணவன் ஒருவன் பார்த்தால் “தேர்வுக்கு படி” என்றும், வியாபாரி “ஓர் அளவை” என்றும், மேஸ்திரி “மாடிப்படி” என்றும்தான் பொருள் கொள்வர். எனவே, உண்மை ஒன்றல்ல, பல. படைத்தவன் என்ன பொருளில் எழுதினானோ அதே பொருளில் அது படிக்கப்படுவதுமில்லை, புரிந்துகொள்ளப்படுவதுமில்லை. இதுதான் ஆசிரியனின் மரணம் எனப்படுகிறது.

மையம்-விளிம்பு:

இவை இரண்டும் எதிர் எதிர் கூறுகள். மையம் என்பது ஆதிக்கம் செலுத்தும் இடம், விளிம்புநிலை அந்த ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் இடம்.

ஆண்-பெண்
முதலாளி-தொழிலாளி
ஆளும் வர்க்கம்-ஆளப்படும் வர்க்கம்

இவற்றில், இடது புறம் உள்ளவற்றை மையம் என்றும், வலது புறம் உள்ளவற்றை விளிம்புநிலை என்றும் சொல்லலாம்.

விளிம்புநிலையை மையத்துடன் சமப்படுத்துவதே நம் வேலை, எனவே இதில் மையத்தை தகர்க்காமல் அதை செய்ய முடியாது. விளிம்புநிலைக்கு உதவ வேண்டும் என்றால், மையத்தை தகர்க்க வேண்டும்.

பெண்ணடிமைத்தனம் ஒழியவேண்டுமா, ஆணாதிக்கம் தகர்க்கப்பட வேண்டும்.
தொழிலாளி விடுதலை அடைய முதலாளி(த்துவம்) தகர்க்கப்பட வேண்டும்
ஆளப்படும் வர்க்கம் விடுதலை அடைய ஆளும் வர்க்கம் தகர்க்கப்பட வேண்டும்.
தலித் மக்கள் விடுதலை அடைய பார்ப்பனியம் தகர்க்கப்பட வேண்டும்.

மையத்தை தகர்த்து விளிம்பு நிலையை உயர்த்துவதே இதன் அடிப்படை

ஆதிகாலம் தொட்டு இன்றைய 20ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்துள்ள அனத்தையும் கேள்விக்குட்படுத்துவதுதான் இதன் சாரம்.

ஒரு சிலர் மையத்தை தகர்க்கிறேன் என்று, அதாவது, நீங்கள் உண்மையே பேச வேண்டும் என்கிறீர்களா, நாங்கள் பொய் பேசுவோம் என்கிறார்கள். நீங்கள் நாகரிகமாக நடக்க வேண்டும் என்கிறீர்களா நாங்கள் அநாகரிகமாக நடந்து கொள்வோம் என்கிறார்கள்.

உண்மை-பொய்
நாகரிகம்-அநாகரிகம்
திருடாமை-திருடுதல்

இவற்றை எதிரெதிர் கூற்களாக்கி இடது புறம் இருப்பதை மையம் என்றும், வலதுபுறம் இருப்பதை விளிம்புநிலை என்றும் புரிந்து கொண்டு மையத்தை தகர்க்கிறேன் என்றும் சொல்கிறார்கள். இது பின்நவீனத்துவம் ஆகாது.

எந்த தத்துவமும் மனித குலத்துக்கு நன்மை செய்வதற்காகவே தோன்றியவையே. பின்நவீனத்துவமும் அப்படியே. ஆனால், சிலர் இதை தவறாக திரித்து கூறுகிறார்கள்.
பின்நவீனத்துவத்தை புரிந்துகொள்ள கட்டவிழ்ப்பு, ஆசிரியனின் மரணம், மையம்-விளிம்பு ஆகியவை அடிப்படையானவை.

உதவிய புத்தகங்கள்:
பின்நவீனத்துவன் என்றால் என்ன?- எம்.ஜி.சுரேஷ்
பின்னை நவீனத்துவம்

Saturday, June 18, 2011

தனிமனிதத்துவம்:

சீன வரலாற்றாசிரியர்கள் ஒருமுறை மா-சேதுங்கிடம் அவரின் சுயசரிதையை எழுத அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர் “ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு சுயவரலாறு உண்டா?” என்று கேட்டார். “சீனாவின் சமூக வரலாற்றை எழுதுங்கள் அதில் என் பெயர் வந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினாராம்.

தனிமனிதத்துவம்:

மனித சமூக வரலாற்றில் தனிமனிதனின் பங்கு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஆய்வு செய்ய புகுந்தால், தற்காலத்தில் ஒரு குண்டூசியைகூட தனி மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது, அதே போல், மனிதனையும் தனியொருவரால் உருவாக்க முடியாது. எந்த ஒரு தனி மனிதனும் இங்கே வானத்தில் இருந்து குதிக்கவில்லை, யாவருமே வரலாற்றின் தொடர்சி, ஒரு நீண்ட சங்கிலியில் ஒரு பினை மட்டுமே. இதில், தனி மனிதனை கொண்டாடுவது என்பது அபத்தம், இந்த அடிப்படையில் நாம் பிறந்தநாளையும் கொண்டாட கூடாது என்பதே உண்மை.

பொருளுக்கு பொருந்தும் இந்த உண்மை கருத்துக்கும் பொருந்தும், மார்க்சிய கருத்து என்பது கூட, வரலாற்றின் தொடர்சிதான், மார்க்ஸ் தத்துவத்துறையில் அதன் முன்னோடிகளான ஹெகலையும், ஃபாயர்பாக்கையும் படித்துதான் அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். அதே போல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித்தையும், டேவிட் ரிக்கார்டையும் படித்துதான் அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். மார்க்சிற்கு பிறகு மார்க்சியத்தை லெனின் வளர்ததெடுக்கிறார். எனவே, இங்கு எல்லாமே ஒரு தொடர்சிதான், தனிமனிதனுக்கு மட்டுமே முழு பங்கு இல்லை. தனிமனிதரின், எண்ணங்கள், திறமைகள், செயல்கள், ஆற்றல்கள் யாவுமே கூட வரலாற்றின் தொடர்சிதான், இதில், இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று எதையும் சொல்வதற்கில்லை. “அடுத்தவன் சொத்தை அபகரிப்பது தப்பு” என்று முதலாளித்துவம் சொல்கிறது. “நீ சொத்து என்று ஒன்று வைத்திருப்பதே தப்பு” என்று கம்யூனிசம் சொல்கிறது.
ஒரு மனிதனுக்கு, தனக்கு மட்டுமே சொந்தமான (personal) எண்ணம் என்று எதுவும் இருக்கலாமா?, அப்படியே இருந்தாலும் அதை மற்றவர்க்கு சொல்லலாமா? சொல்லக்கூடாதா?. நியாயத்திற்கு வேண்டுமானால் இரண்டு பக்கம் இருக்கலாம், ஆனால், உண்மைக்கு ஒரு பக்கம்தானே இருக்க முடியும். ஒரு கொலைகாரனை தண்டிக்க சட்டத்திற்கு ஒரு நியாயம் இருக்கலாம், ஆனால், அவன் கொலை செய்ததற்கும் ஒரு நியாயம் இருக்கவே செய்யும். பத்துபேரின் மத்தியில் திருடியதை ஒப்புக்கொள்ள தயங்குகிறாயா, திருடாதே. “சமூகத்தின் மத்தியில் ஒப்புக்கொள்ள தயங்கும் எந்த ஒரு செயலையும் நாம் செய்யகூடாது” என்பதே பொதுவிதி. இதன் முடிவாக, திருட்டுத்தனம் என்பதற்கு இன்னொரு பெயர்தான் personal என்று ஆகிறது.

பத்திரிக்கை நிருபர்கள் ஒருமுறை எங்கெல்சிடம் “நீங்களும் மார்க்சும் பிறக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேட்டார்கள், அதற்கு அவர், “இந்த பொதுவுடைமை தத்துவத்தை வேறு யாராவது கண்டுபிடித்து சொல்லியிருப்பார்கள்” என்று சொன்னார். மேலும், “வரலாறு அதற்கு எங்களை பயன்படுத்தி கொண்டது” என்றும் சொன்னார். சமூகம் என்பதில் எத்தனை அக்கறை கொண்டிருந்தால் அவர் இந்த பதிலை கூறியிருக்க முடியும். வரலாற்றின் தவிர்க்க முடியாத நிகழ்வாகத்தான் அவர்கள் இதைப் பார்த்தார்களே ஒழிய தங்களின் தனிப்பட்ட சாதனையாக அவர்கள் கருதவில்லை.

இப்போது முதல் பத்தியை மீண்டும் படித்துபாருங்கள்.

Friday, June 10, 2011

இவர்களின் கொள்கைகளையன்றி வேறொன்றை நாடேன்

பொதுவுடைமை தத்துவத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்த சமூக விஞ்ஞானிகள்
மார்க்ஸ்-எங்கெல்ஸ்

சோஷியலிசத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் புரட்சியாளர்கள்
லெனின்-ஸ்டாலின், மாசே-துங்

இந்திய பார்ப்பனிய சமூகத்தின் ஆதிக்கத்தை தகர்க்க போராடிய சட்ட மாமேதை
அம்பேத்கர்

மானம் கெடுப்பாரை
அறிவை தடுப்பாரை
மன்னோடு பெயர்த்த கடப்பாரை
தந்தை பெரியார்

இவர்களையன்றி, இவர்களின் கொள்கைகளையன்றி வேறொன்றை நாடேன்

முன்னுரை

வாரம் ஒருமுறை அல்லது தினமும், அல்லது மணிக்கொருமுறை வலைப்பூவில் கட்டூரை எழுதும்
எழுத்தாளர்களுக்கு நடுவில், ஆண்டுக்கொருமுறையாவது நான் எழுதவில்லை என்றால் என் பேனா, இல்லை இல்லை தட்டச்சு பலகை என்னை மண்ணிக்காது.

ஆனால் என்ன எழுதுவது,
சொந்த அனுபவங்களையா,
அரசியல் செய்திகளையா,
சினிமா செய்திகளையா,

சரி, ஏதோ ஒன்னு, இனி, இந்த பதிவு தோட்டத்தில் வாரம் ஒருமுறை பூ பூக்கும்.

Monday, June 28, 2010

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-5 (உபரி மதிப்பு கோட்பாடு)

இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது

நம்முடைய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்
இதில் இரண்டு வழி முறைகள் உள்ளன, முதலாளித்துவ வழிமுறை, மார்க்சிய வழிமுறை
முதலில் முதலாளித்துவ வழிமுறையைப் பார்ப்போம்

நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
கூலி (12 மணிநேர உழைப்புக்கு) = 100 ரூபாய்

இவற்றில் நிலம், கட்டிடம், இயந்திரம் ஆகியவை நிலைத்த மூலதனம் என்றும், மின்சார செலவு, மூலப் பொருள், கூலி ஆகியவை சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்படுகிறது.

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மொத்த மூலதனம்) X 100
8 மணிநேர உழைபுக்கு 100 ரூபாய் கூலி என்றால், 12 மணிநேரத்துக்கு 150 ரூபாய் ஆகும்.

எனவே உபரி உழைப்பின் மதிப்பு 50 ரூபாய் ஆகிறது.
உபரி மதிப்பின் வீதம் = (50/230)X100 = 21.73% ~ 20% ஆகிறது.
முதலாளித்துவ சமூகம் உபரிமதிப்பை இப்படிதான் கணக்கிடுகிறது.

ஆனால் மார்க்ஸ் இது தவறு என்று நிரூபிக்கிறார்: எப்படி

மார்க்சிய வழிமுறை

உபரி மதிப்பை கணக்கிடும் போது எந்த மூலதனம் உபரியை தருகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மொத்த மூலதனத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதாவது மார்க்ஸ் மூலதனத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்

நிலம், கட்டிடம், இயந்திரம், மின்சார செலவு, மூலப்பொருள் இவை எல்லாம் உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை என்பதால் இவை மாறா மூலதனம் எனப்படுகிறது.

கூலி மட்டுமே உபரி மதிப்பைத் தோற்றுவிப்பதால், அது மட்டுமே மாறும் மூலதனம் ஆகும். இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மாறும் மூலதனம்) X 100
உபரி மதிப்பின் வீதம் = (50 / 100) X 100 = 50%

எனவே முதலாளித்துவ அறிஞர்கள் சொல்வது போல, உபரி மதிப்பின் வீதம் 20% அல்ல, அது 50% என்பதை மார்க்ஸ் நிரூபிக்கிறார்.

8 மணிநேர உழைப்புக்கான கூலியை பெற்றுக் கொண்டு ஒரு தொழிலாளி 12 மணிநேரம் உழைக்கிறார். கூடுதலான அந்த 4 மணிநேர உழைப்பின் மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்கிறார். ஏன்,

உற்பத்திசாதனங்கள் (நிலம், கட்டிடம், இயந்திரம்) எல்லாம் முதலாளிக்கு சொந்தமாக இருக்கிறது.
தொழிலாளிக்கு தன்னுடைய உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவுமே சொந்தமாக இல்லை.
இதனாலேயே, உபரி மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. இயந்திரம், கட்டிடம் எல்லாம் வானத்தில் இருந்து வந்தவை அல்ல, அதுவும் தொழிலாளர்களின் உழைப்புதான். இதைதான் மார்க்ஸ் இறந்த கால உழைப்பின் மீது நிகழ்கால உழைப்பு வினை புரிகிறது என்றார்.

(உற்பத்தி சாதனங்கள் எல்லாம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி சொந்தமானது என்பது தனி வரலாறு.)

நம்முடைய உதாரணத்தில் 270 ரூபாய் மதிப்புக்கொண்ட நூலை 230 ரூபாய்க்கே தயாரித்துவிடுகிறார் அந்த முதலாளி. அதில் 50 ரூபாய் உபரிமதிப்பு என்று ஆகிறது.
250 ரூபாய்க்கு மொத்த வியாபாரியிடம் விற்று 30 ரூபாயை தான் எடுத்துக்கொள்கிறார்.
மொத்தவியாபாரி, 260 ரூபாய்க்கு சில்லறைவியாபாரியிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.

சில்லறைவியாபாரி, அதன் உண்மை மதிப்பான 270 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.
இப்படியாக ஒரு தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட உபரிமதிப்பை, இந்த சமூகம் பலவாறாக தனக்குள் பிரித்துக்கொள்கிறது.

இவ்ளோதாங்க உபரி மதிப்புக் கோட்பாடுங்கறது.

இப்பொழுது மூலதனம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
50 ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக்கொண்ட அந்த முதலாளி, அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தன்னுடைய தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால்
அந்த 10 ரூபாய் தான் மூலதனம் எனப்படும்.
உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த பகுதியே மூலதனம் எனப்படும்.

மூலதனம் உபரிமதிப்பை தோற்றுவிக்கும்,
உபரி மதிப்பு மூலதனத்தை பெருக்கமடைய செய்யும்.

மூலதனமும், உபரிமதிப்பும், இரண்டு எதிர் எதிர் கூறுகள் (இயங்கியலின் முதல் விதியான ‘எதிர்கூறுகளின் ஒற்றுமையும், போராட்டமும்’ என்ற விதியை இங்கு நினைகூர்க)

கூலியையும், உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளியும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டார்கள்.

பிரச்சனையின் தீர்வாக, இருவரும் அதை (கூலியயும், உபரி மதிப்பையும்) நியாயமான முறையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் கூறினார்கள்.

முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில் கண்டார்களோ, அதே இடத்தில்தான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிரூபித்தார்.

முலதனத்துக்கும், உபரி மதிப்புக்கும் உள்ள இந்த முரண்பாட்டால், முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் அளவு மாற்றம் எப்படி இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.

முதலாளி உபரி மதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1. கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
2. அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது

கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளின் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது. தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.

உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு, அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.

எனவே முதலாளிகள் இரண்டாவது வழியை பின்பற்ற ஆரம்பித்தார்கள்

அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.
நம்முடைய உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மனி நேரம் என்று பார்த்தோம். அதாவது 230 ரூபய் மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பத்தின் காரணமாக அதே 230 ரூபய் மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
என்ன ஆகும்?

இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.
ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் இருந்தது,

இப்பொழுது அவசியமான உழைப்பு நேரம் 4 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 8 மணி நேரம் என்றும் ஆகிறது.

ஒரு பொருளின் மதிப்பு உழைப்பின் கால அளவை பொருத்தது என்று ஏற்கனவே பார்த்தோம்.
8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும். எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள். தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள். எல்லா முதலாளிகளும் அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால், அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும், பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.

எனவே முதலாளித்துவம், சுய லாபத்திற்காக தொழில் நுட்ப வளர்சியை துரிதப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது,

எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலேயும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறுவதற்கு காரணம் இதுதான்.

தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது, எனவே மூலதனமும் அதிகமாகிறது.

மூதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது. எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒருசில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெரு முதலாளிகள் ஆகின்றனர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து விடுகிறார்.

பாட்டாளிகள் பெருக பெருக அவர்கள் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு புரட்சி செய்யும் போது, சமூக மாற்றம் ஏற்படும், அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-4 (உபரி மதிப்பு கோட்பாடு)

ஒரு தொழிற்சாலை தொடங்க என்னென்ன தேவைப்படும்

1. நிலம், கட்டிடம்
2. இயந்திரங்கள்
3. மூலப் பொருள்
4. மின்சாரம் இன்ன பிற
5. தொழிலாளி

இந்த ஐந்தும் இருந்தால்தான் ஒரு தொழிலை தொடங்க முடியும்

உதாரணத்திற்கு இங்கு நாம் பஞ்சிலிருந்து நூல் நூற்கும் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைவோம்.

M1 - C1 - P - C2 - M2

இதில் M1 (Money) என்பது
ஒரு முதலாளி நிலம் / கட்டிடம், இயந்திரங்கள், மின்சாரம், தொழிலாளி இவற்றிற்க்காக செலவிடும் தொகை எனலாம்.

C1 (Commodity) என்பது மூலபொருளாகிய பஞ்சு
P (Process) என்பது உற்பத்தியைக் குறிக்கும்
உற்பத்திக்கு பிறகு மூலப்பொருள் உறுமாற்றம் (C2) அடைகிறது. கூடவே அதன் மதிப்பும் (M2) உயருகிறது.
M2 - M1 = m
இங்கு m என்பது உபரிமதிப்பு எனப்படும்.

இந்த உபரி மதிப்பு எப்படி உற்பத்தியாகிறது.
இயந்திரங்கள் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறதா?

நிச்சயமாக இல்லை, ஒரு இயந்திரத்தின் மதிப்பு 10000 ரூபாயும், அதன் வாழ்நாள் 1000 நாளும் என்றால், அந்த இயந்திரம் ஒவ்வொருநாளும் 10 ரூபாய் மதிப்பை மட்டுமே பஞ்சிலிருந்து நூலுக்கு பெயர்க்கும். அதை காட்டிலும் அது அதிகமாக (உபரியாக) ஒரு ரூபயைக்கூட கொடுக்காது.

நிலம், கட்டிடம், மினசாரம் ஆகியவைகளும் அப்படிதான், அதன் மதிப்பை அப்படியே உற்பத்திப் பொருளுக்கு பெயர்க்குமே தவிர உபரியாக (கூடுதலாக) ஒரு ரூபாயைக் கூட பெயர்க்காது.

சரி, மூலப்பொருளினால் உபரிமதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு மூட்டை பஞ்சின் விலை 100 ரூபாய் என்றால், மூலப்பொருள் உறபத்தியாளரிடமிருந்து நாம் அதை 100 ரூபாய் கொடுத்துதான் வாங்கியிருப்போம். ஒரு வேளை நாம் அதை அவரிடம் பேரம் பேசி 90 ரூபாய்க்கே வாங்கினால், 10 ரூபாய் லாபம் வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையில் அந்த பத்து ரூபாய் என்பது அவர் அடைந்த நஷ்டம் தானே ஒழிய வேறில்லை, அவரின் நஷ்டம் இவருக்கு லாபம் என்றாகிறதே ஒழிய, அது உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை.

மீதி இருப்பது தொழிலாளியின் உழைப்பு ஒன்றுதான். அது மட்டும்தான் உபரியை தோற்றுவிக்க முடியும், அது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் விலை மற்றும் கூலி ஆகியவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

விலை என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் மதிப்பை பணதொகையின் மூலமாக சொல்வதுதான் விலை எனப்படும்.
விலையை எப்படி நிர்ணயிப்பது?
அந்த பண்டத்தை செய்வதற்கு ஆகும் செலவுதான், அதன் விலை எனப்படும்.
நம்முடைய உதாரணத்தில்
நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
உழைப்பு சக்த்தியின் மதிப்பு (கூலி) = 100 ரூபாய்
மொத்தம் = 230 ரூபாய்
எனவே 100 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு மூட்டை பஞ்சானது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது 230 ரூபாய் மதிப்பு கொண்ட நூல் என்ற இன்னொரு பண்டமாகிறது.
அந்த நூலின் விலை 230 ரூபாய் ஆகும். அதன் மீது கூடுதலாக ஏற்றப்பட்ட மதிப்பு 130 ரூபாய் ஆகிறது. இப்பொழுது முதலாளி அந்த நூலை விற்பனை செய்ய வேண்டும். அவர் அதை 230 ரூபாய்க்கே விற்கிறார் என்றால், அவருக்கு துளியும் லாபம் கிடைக்காது. எனவே அதை அவர் 230 ரூபாயை விட குறைவான செலவிலேயே உற்பத்தி செய்ய முற்படவேண்டும்.

கூலி என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் விலை என்பது, அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவவுக்கு சமம் என்பதைப் போலவே, தொழிலாளியின் குறிப்பிட்ட மணிநேர உழைப்புக்கு கொடுக்கும் கூலியானது, அதை அந்த தொழிலாளி மறு உருவாக்கம் செய்து கொள்ளும் செலவுக்கு சமம் ஆகிறது.
அதாவது ஒரு தொழிலாளி உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம், தனக்கு பிறகு இன்னொரு தொழலாளியை உருவாகும் விதமாக தன் குடும்பத்தை பராமரிக்க ஆகும் செலவு, என்ற இவற்றின் மொத்த தொகையையே கூலியாக பெறுகிறார்.

உண்மையான கூலி என்றால் என்ன?
முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பண்டமானது சந்தையில் விற்பனைக்கு வருவது போலவே, தொழிலாளியின் உழைப்பு சக்த்தியும் ஒரு பண்டமாக விற்பனைக்கு வருகிறது. அதை முதலாளிகள் வாங்க முற்படுகிறார்கள்.
8 மணிநேர (ஏன் 8 மணி நேரம் என்பதை பிறகு விளக்குகிறேன்) உழைப்புக்கு 100 ரூபாய் கூலி என்று ஒப்பந்தம் போட்டு வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், முடிவில், முதலாளிக்கு ஒரு பைசாவும் லாபமாக கிடைக்காது. எனவே, இதைக் கருத்தில் கொண்டே முதலாளிகள் தொழிலாளர்களிடம் முதலிலேயே 12 மணிநேரத்தை வேலைநேரமாக சொல்லி விடுகிறார்கள்.
எனவே, 8 மணிநேரத்திற்கான கூலியாக தொழிலாளி 100 ரூபாயைப் பெற்று கொள்கிறான், ஆனால், முதலாளிக்காக மேலும் 4 மணி நேரம் கூடுதலக வேலை செய்கிறான். அந்த நேரத்தில் உற்பத்தியாகும் மதிப்புதான் உபரி மதிப்பு ஆகும்.

நிலம், கட்டிடம், இயந்திரம், மூலப்பொருள் இவையெல்லாம் உபரியை தோற்றுவிக்காது என்பதால், அவர் ஒரு தொழிலாளியிடம் இருந்துதான் இதை அபகரிக்க முடியும்.
நரம்பும், சதையையும் கொண்ட ஒரு தொழிலாளியால்தான், உபரிமதிப்பைத் தோற்றுவிக்க முடியும்.

எனவே ஒரு தொழிலாளியின் உழைப்பு நேரத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. அவசியமான உழைப்பு நேரம் (இதன் மதிப்பை தொழிலாளி கூலியாக பெற்று விடுகிறார்)
2. உபரி உழைப்பு நேரம் (இதன் மதிப்பை முதலாளி அபகரித்துக் கொள்கிறார்)

இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-3 (உபரி மதிப்பு கோட்பாடு)

மார்க்சிய பொருளியல்
இதில் உபரி மதிப்பு கோட்பாடு குறித்து விளக்கப்படுகிறது

பொருளாதாரத்தின் அடிப்படைகளாக முதலில் நாம் பார்க்க வேண்டியது இவைதான்
1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
2. மதிப்பு
1. பயன் மதிப்பு என்றால் என்ன?
2. பரிவர்த்தனை மதிப்பு என்றால் என்ன?
3. மதிப்பு என்றால் என்ன?
3. பணம் என்றால் என்ன?
4. லாபம் என்றால் என்ன?
5. உபரி மதிப்பு என்றால் என்ன?

ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு எனப்படுவது போல,

ஒரு உயிரின் அடிப்படை அலகு செல் எனப்படுவது போல,

பொருளாதாரத்தின் அடிப்படை அலகு பண்டம் அல்லது சரக்கு (commodity) எனப்படும்.

1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
நாம் நம்முடைய வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து நாமே பயன்படுத்திக் கொண்டால் அந்த தண்ணீர் ஒரு பொருள்தான். ஆனால் அதையே ஒரு பாட்டிலில் அடைத்து சந்தையில் வைத்து விற்றால், அது பண்டம் ஆகிறது

விற்பதற்க்காகவே உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சரக்கு எனப்படும்.

சரக்கு என்பது மதிப்புகளை கொன்டது.
1. பயன் மதிப்பு
2. பரிவர்த்தனை மதிப்பு
3. மதிப்பு

பயன் மதிப்பு:
தண்ணீர் குடிக்க பயன்படுகிறது, புத்தகம் படிக்க பயன்படுகிறது, பேனா எழுத பயன்படுகிறது. இவ்வாறு ஒரு பண்டம் அதன் பயன்பாட்டைப் பொருத்து மதிப்பிடப்படுவது பயன் மதிப்பு எனப்படும்.
பயன்பாடு அல்லாத ஒரு பொருள் பண்டமாவதில்லை.

பரிவர்த்தனை மதிப்பு:
இது சந்தையில் தேவை மற்றும் அளிப்பு (demand and supply) விதியைப் பொருத்து மாறுபடும்.
மக்களுக்கு தேவை (demand) அதிகமாக இருந்தால் அந்த பண்டத்தின் மதிப்பு அதிகரிக்கும். சந்தையில் அளிப்பு (supply) அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு குறையும், இதுவே சந்தைகான பொது விதி. (ஆனால் ஒவ்வொரு பண்டமும் அதன் உண்மையான மதிப்புக்குதான் விற்கப்படுகிறது என்பதை பிறகு பார்க்கலாம்)

மதிப்பு:
பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு அல்லாமல் ஒவ்வொரு பண்டத்திற்கும் உண்மையான மதிப்பு என்று ஒன்று உண்டு,

தங்கத்தின் மதிப்பு ஏன் அதிகமாக இருக்கிறது, செங்கல்லின் மதிப்பு ஏன் குறைவாக இருக்கிறது,
பயன்பாட்டை பொருத்து மதிப்பு அதிகரிக்குமா என்றால், இல்லை, ஏனெனில், தங்கத்தின் பயன்பாட்டை விட தண்ணீரின் பயன்பாடுதான் அதிகம், பயன்பாட்டை பொருத்து என்றால் தண்ணீரின் விலைதான் தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை.

உண்மையில், ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பது என்றால், அதன் மீது செலவிடப்பட்ட மனித உழைப்பைக் கொண்டுதான் நிர்ணயிக்க வேண்டும்.

அதன்படி தங்கத்தின் மிது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு அதிகம். ஆனால் செங்கல்லின் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு குறைவு. எனவேதான் தங்கத்தின் மதிப்பு என்பது தண்ணீரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது.

ஒருவேளை நாளை யாராவது, புதிய ரசவாதத்தால் செங்கல்லை தங்கமாக மாற்றுகிறார் என்றால், என்ன ஆகும், தங்கத்தின் மதிப்பு செங்கல்லின் மதிப்புக்கு இறங்கிவிடும்.
எனவே ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது அதன் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவைப் பொருத்தது.

சரி, உழைப்பின் அளவை எப்படி நிர்ணயிப்பது?

உழைப்பின் அளவு என்பது அதன் கால அளவை பொருத்தது. அதாவது, அந்த பண்டத்தை தயாரிப்பதற்காக ஆகும் நேரத்தை பொருத்தது.

ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது தனியானதல்ல, அது ஒரு ஒப்பீட்டு வடிவம் ஆகும். அதாவது, ஒரு புத்தகம் செய்வதற்கு 2மணிநேரம் ஆகிறது என்றால், இதை மட்டும் வைத்துக் கொண்டு அதை மதிப்பிட முடியாது. ஒரு பேனா செய்வதற்கு 1மணிநேரம் ஆகிறது என்றால் இப்பொழுது, ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் எனலாம். இதுதான் ஒப்பீட்டு வடிவம் என்பது. மதிப்பை இப்படித்தான் நாம் அளவிட முடியும்.

3. பணம்
மதிப்பு என்பது ஒரு ஒப்பீட்டு வடிவம் என்று பார்த்தோம். ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மனிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் எனலாம். இவற்றை பரிமாறிகொள்ளும் போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு பண்டம் தேவைப்பட்டது.

அதாவது 1புத்தகம் = 2பேனா = அரை கிராம் தங்கம் (உதாரணத்திற்கு) என்றால் இங்கு அரைகிராம் தங்கம் பணமாக கொள்ளப்படுகிறது. இது நாமாக ஏற்படுத்திகொண்ட அமைப்புதானே ஒழிய தங்கம் தான் பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதையெதையோ வைத்துப் பார்த்து இறுதியாக தங்கத்தை பணமாக வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
எனவே பணம் என்பது பண்ட பரிமாற்றத்திற்கான ஒரு விசேஷ பண்டம்தானே ஒழிய வேறில்லை.
பணம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றிய பண்டம் அல்ல, பணம் அடிமை சமுதாயத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
இந்த பணம்தான் முதலாளித்துவ சமூதாயத்தில் எப்படி மூலதனமாகி ஆட்டிப் படைக்கிறது என்று இனிமேல் பார்க்க இருக்கிறோம்.

4. லாபம்
சமநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் என்றால், இதில் லாபம் என்பது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும் அல்லவா?
ஒரு வியாபாரி ஒரு பண்டத்தை வாங்கி அப்படியே இன்னொருவரிடம் விற்கிறார் என்றால் அவருக்கு லாபம் எப்படி வருகிறது?

உதாரணமாக:
உண்மையில் ஒரு சில்லறை வியாபாரி 100 ரூபாய் மதிப்பிலான ஒரு பண்டத்தை 90 ரூபாய்க்கே வாங்கி விடுகிறார். அதை 100 ரூபாய் என்று நுகர்வோரிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.

ஒரு மொத்த வியாபாரியும் 100 ரூபாய் மதிப்பிலான அதே பண்டத்தை 80 ரூபாய்க்கே வாங்கி 90 ரூபாய் என்று சில்லறை வியாபாரியிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இதேபோல் ஒரு முதலாளி 100 ரூபாய் மதிப்பிலான அந்த பண்டத்தை, 60 ரூபாய்க்கே தயாரித்து விடுகிறார், அதை 80 ரூபாய்க்கு விற்று 20 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?

முதலாளி ---- மொத்த வியாபாரி ---- சில்லறை வியாபாரி ---- நுகர்வோர்

இந்த தொடர் வரிசையில் பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்கே சென்று ஆய்வு செய்தால் மட்டுமே அதன் புதிரை விடுவிக்க முடியும்.

எனவே மார்க்சிய ஆர்வலர்களாகிய உங்களுடன் சேர்ந்து ஒரு பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்குள் நுழைவோம் வாருங்கள்,