Monday, June 28, 2010

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-3 (உபரி மதிப்பு கோட்பாடு)

மார்க்சிய பொருளியல்
இதில் உபரி மதிப்பு கோட்பாடு குறித்து விளக்கப்படுகிறது

பொருளாதாரத்தின் அடிப்படைகளாக முதலில் நாம் பார்க்க வேண்டியது இவைதான்
1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
2. மதிப்பு
1. பயன் மதிப்பு என்றால் என்ன?
2. பரிவர்த்தனை மதிப்பு என்றால் என்ன?
3. மதிப்பு என்றால் என்ன?
3. பணம் என்றால் என்ன?
4. லாபம் என்றால் என்ன?
5. உபரி மதிப்பு என்றால் என்ன?

ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு எனப்படுவது போல,

ஒரு உயிரின் அடிப்படை அலகு செல் எனப்படுவது போல,

பொருளாதாரத்தின் அடிப்படை அலகு பண்டம் அல்லது சரக்கு (commodity) எனப்படும்.

1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
நாம் நம்முடைய வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து நாமே பயன்படுத்திக் கொண்டால் அந்த தண்ணீர் ஒரு பொருள்தான். ஆனால் அதையே ஒரு பாட்டிலில் அடைத்து சந்தையில் வைத்து விற்றால், அது பண்டம் ஆகிறது

விற்பதற்க்காகவே உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சரக்கு எனப்படும்.

சரக்கு என்பது மதிப்புகளை கொன்டது.
1. பயன் மதிப்பு
2. பரிவர்த்தனை மதிப்பு
3. மதிப்பு

பயன் மதிப்பு:
தண்ணீர் குடிக்க பயன்படுகிறது, புத்தகம் படிக்க பயன்படுகிறது, பேனா எழுத பயன்படுகிறது. இவ்வாறு ஒரு பண்டம் அதன் பயன்பாட்டைப் பொருத்து மதிப்பிடப்படுவது பயன் மதிப்பு எனப்படும்.
பயன்பாடு அல்லாத ஒரு பொருள் பண்டமாவதில்லை.

பரிவர்த்தனை மதிப்பு:
இது சந்தையில் தேவை மற்றும் அளிப்பு (demand and supply) விதியைப் பொருத்து மாறுபடும்.
மக்களுக்கு தேவை (demand) அதிகமாக இருந்தால் அந்த பண்டத்தின் மதிப்பு அதிகரிக்கும். சந்தையில் அளிப்பு (supply) அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு குறையும், இதுவே சந்தைகான பொது விதி. (ஆனால் ஒவ்வொரு பண்டமும் அதன் உண்மையான மதிப்புக்குதான் விற்கப்படுகிறது என்பதை பிறகு பார்க்கலாம்)

மதிப்பு:
பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு அல்லாமல் ஒவ்வொரு பண்டத்திற்கும் உண்மையான மதிப்பு என்று ஒன்று உண்டு,

தங்கத்தின் மதிப்பு ஏன் அதிகமாக இருக்கிறது, செங்கல்லின் மதிப்பு ஏன் குறைவாக இருக்கிறது,
பயன்பாட்டை பொருத்து மதிப்பு அதிகரிக்குமா என்றால், இல்லை, ஏனெனில், தங்கத்தின் பயன்பாட்டை விட தண்ணீரின் பயன்பாடுதான் அதிகம், பயன்பாட்டை பொருத்து என்றால் தண்ணீரின் விலைதான் தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை.

உண்மையில், ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பது என்றால், அதன் மீது செலவிடப்பட்ட மனித உழைப்பைக் கொண்டுதான் நிர்ணயிக்க வேண்டும்.

அதன்படி தங்கத்தின் மிது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு அதிகம். ஆனால் செங்கல்லின் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு குறைவு. எனவேதான் தங்கத்தின் மதிப்பு என்பது தண்ணீரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது.

ஒருவேளை நாளை யாராவது, புதிய ரசவாதத்தால் செங்கல்லை தங்கமாக மாற்றுகிறார் என்றால், என்ன ஆகும், தங்கத்தின் மதிப்பு செங்கல்லின் மதிப்புக்கு இறங்கிவிடும்.
எனவே ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது அதன் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவைப் பொருத்தது.

சரி, உழைப்பின் அளவை எப்படி நிர்ணயிப்பது?

உழைப்பின் அளவு என்பது அதன் கால அளவை பொருத்தது. அதாவது, அந்த பண்டத்தை தயாரிப்பதற்காக ஆகும் நேரத்தை பொருத்தது.

ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது தனியானதல்ல, அது ஒரு ஒப்பீட்டு வடிவம் ஆகும். அதாவது, ஒரு புத்தகம் செய்வதற்கு 2மணிநேரம் ஆகிறது என்றால், இதை மட்டும் வைத்துக் கொண்டு அதை மதிப்பிட முடியாது. ஒரு பேனா செய்வதற்கு 1மணிநேரம் ஆகிறது என்றால் இப்பொழுது, ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் எனலாம். இதுதான் ஒப்பீட்டு வடிவம் என்பது. மதிப்பை இப்படித்தான் நாம் அளவிட முடியும்.

3. பணம்
மதிப்பு என்பது ஒரு ஒப்பீட்டு வடிவம் என்று பார்த்தோம். ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மனிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் எனலாம். இவற்றை பரிமாறிகொள்ளும் போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு பண்டம் தேவைப்பட்டது.

அதாவது 1புத்தகம் = 2பேனா = அரை கிராம் தங்கம் (உதாரணத்திற்கு) என்றால் இங்கு அரைகிராம் தங்கம் பணமாக கொள்ளப்படுகிறது. இது நாமாக ஏற்படுத்திகொண்ட அமைப்புதானே ஒழிய தங்கம் தான் பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதையெதையோ வைத்துப் பார்த்து இறுதியாக தங்கத்தை பணமாக வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
எனவே பணம் என்பது பண்ட பரிமாற்றத்திற்கான ஒரு விசேஷ பண்டம்தானே ஒழிய வேறில்லை.
பணம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றிய பண்டம் அல்ல, பணம் அடிமை சமுதாயத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
இந்த பணம்தான் முதலாளித்துவ சமூதாயத்தில் எப்படி மூலதனமாகி ஆட்டிப் படைக்கிறது என்று இனிமேல் பார்க்க இருக்கிறோம்.

4. லாபம்
சமநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் என்றால், இதில் லாபம் என்பது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும் அல்லவா?
ஒரு வியாபாரி ஒரு பண்டத்தை வாங்கி அப்படியே இன்னொருவரிடம் விற்கிறார் என்றால் அவருக்கு லாபம் எப்படி வருகிறது?

உதாரணமாக:
உண்மையில் ஒரு சில்லறை வியாபாரி 100 ரூபாய் மதிப்பிலான ஒரு பண்டத்தை 90 ரூபாய்க்கே வாங்கி விடுகிறார். அதை 100 ரூபாய் என்று நுகர்வோரிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.

ஒரு மொத்த வியாபாரியும் 100 ரூபாய் மதிப்பிலான அதே பண்டத்தை 80 ரூபாய்க்கே வாங்கி 90 ரூபாய் என்று சில்லறை வியாபாரியிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இதேபோல் ஒரு முதலாளி 100 ரூபாய் மதிப்பிலான அந்த பண்டத்தை, 60 ரூபாய்க்கே தயாரித்து விடுகிறார், அதை 80 ரூபாய்க்கு விற்று 20 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?

முதலாளி ---- மொத்த வியாபாரி ---- சில்லறை வியாபாரி ---- நுகர்வோர்

இந்த தொடர் வரிசையில் பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்கே சென்று ஆய்வு செய்தால் மட்டுமே அதன் புதிரை விடுவிக்க முடியும்.

எனவே மார்க்சிய ஆர்வலர்களாகிய உங்களுடன் சேர்ந்து ஒரு பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்குள் நுழைவோம் வாருங்கள்,

No comments: