Monday, June 28, 2010

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-4 (உபரி மதிப்பு கோட்பாடு)

ஒரு தொழிற்சாலை தொடங்க என்னென்ன தேவைப்படும்

1. நிலம், கட்டிடம்
2. இயந்திரங்கள்
3. மூலப் பொருள்
4. மின்சாரம் இன்ன பிற
5. தொழிலாளி

இந்த ஐந்தும் இருந்தால்தான் ஒரு தொழிலை தொடங்க முடியும்

உதாரணத்திற்கு இங்கு நாம் பஞ்சிலிருந்து நூல் நூற்கும் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைவோம்.

M1 - C1 - P - C2 - M2

இதில் M1 (Money) என்பது
ஒரு முதலாளி நிலம் / கட்டிடம், இயந்திரங்கள், மின்சாரம், தொழிலாளி இவற்றிற்க்காக செலவிடும் தொகை எனலாம்.

C1 (Commodity) என்பது மூலபொருளாகிய பஞ்சு
P (Process) என்பது உற்பத்தியைக் குறிக்கும்
உற்பத்திக்கு பிறகு மூலப்பொருள் உறுமாற்றம் (C2) அடைகிறது. கூடவே அதன் மதிப்பும் (M2) உயருகிறது.
M2 - M1 = m
இங்கு m என்பது உபரிமதிப்பு எனப்படும்.

இந்த உபரி மதிப்பு எப்படி உற்பத்தியாகிறது.
இயந்திரங்கள் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறதா?

நிச்சயமாக இல்லை, ஒரு இயந்திரத்தின் மதிப்பு 10000 ரூபாயும், அதன் வாழ்நாள் 1000 நாளும் என்றால், அந்த இயந்திரம் ஒவ்வொருநாளும் 10 ரூபாய் மதிப்பை மட்டுமே பஞ்சிலிருந்து நூலுக்கு பெயர்க்கும். அதை காட்டிலும் அது அதிகமாக (உபரியாக) ஒரு ரூபயைக்கூட கொடுக்காது.

நிலம், கட்டிடம், மினசாரம் ஆகியவைகளும் அப்படிதான், அதன் மதிப்பை அப்படியே உற்பத்திப் பொருளுக்கு பெயர்க்குமே தவிர உபரியாக (கூடுதலாக) ஒரு ரூபாயைக் கூட பெயர்க்காது.

சரி, மூலப்பொருளினால் உபரிமதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு மூட்டை பஞ்சின் விலை 100 ரூபாய் என்றால், மூலப்பொருள் உறபத்தியாளரிடமிருந்து நாம் அதை 100 ரூபாய் கொடுத்துதான் வாங்கியிருப்போம். ஒரு வேளை நாம் அதை அவரிடம் பேரம் பேசி 90 ரூபாய்க்கே வாங்கினால், 10 ரூபாய் லாபம் வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையில் அந்த பத்து ரூபாய் என்பது அவர் அடைந்த நஷ்டம் தானே ஒழிய வேறில்லை, அவரின் நஷ்டம் இவருக்கு லாபம் என்றாகிறதே ஒழிய, அது உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை.

மீதி இருப்பது தொழிலாளியின் உழைப்பு ஒன்றுதான். அது மட்டும்தான் உபரியை தோற்றுவிக்க முடியும், அது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் விலை மற்றும் கூலி ஆகியவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

விலை என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் மதிப்பை பணதொகையின் மூலமாக சொல்வதுதான் விலை எனப்படும்.
விலையை எப்படி நிர்ணயிப்பது?
அந்த பண்டத்தை செய்வதற்கு ஆகும் செலவுதான், அதன் விலை எனப்படும்.
நம்முடைய உதாரணத்தில்
நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
உழைப்பு சக்த்தியின் மதிப்பு (கூலி) = 100 ரூபாய்
மொத்தம் = 230 ரூபாய்
எனவே 100 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு மூட்டை பஞ்சானது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது 230 ரூபாய் மதிப்பு கொண்ட நூல் என்ற இன்னொரு பண்டமாகிறது.
அந்த நூலின் விலை 230 ரூபாய் ஆகும். அதன் மீது கூடுதலாக ஏற்றப்பட்ட மதிப்பு 130 ரூபாய் ஆகிறது. இப்பொழுது முதலாளி அந்த நூலை விற்பனை செய்ய வேண்டும். அவர் அதை 230 ரூபாய்க்கே விற்கிறார் என்றால், அவருக்கு துளியும் லாபம் கிடைக்காது. எனவே அதை அவர் 230 ரூபாயை விட குறைவான செலவிலேயே உற்பத்தி செய்ய முற்படவேண்டும்.

கூலி என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் விலை என்பது, அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவவுக்கு சமம் என்பதைப் போலவே, தொழிலாளியின் குறிப்பிட்ட மணிநேர உழைப்புக்கு கொடுக்கும் கூலியானது, அதை அந்த தொழிலாளி மறு உருவாக்கம் செய்து கொள்ளும் செலவுக்கு சமம் ஆகிறது.
அதாவது ஒரு தொழிலாளி உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம், தனக்கு பிறகு இன்னொரு தொழலாளியை உருவாகும் விதமாக தன் குடும்பத்தை பராமரிக்க ஆகும் செலவு, என்ற இவற்றின் மொத்த தொகையையே கூலியாக பெறுகிறார்.

உண்மையான கூலி என்றால் என்ன?
முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பண்டமானது சந்தையில் விற்பனைக்கு வருவது போலவே, தொழிலாளியின் உழைப்பு சக்த்தியும் ஒரு பண்டமாக விற்பனைக்கு வருகிறது. அதை முதலாளிகள் வாங்க முற்படுகிறார்கள்.
8 மணிநேர (ஏன் 8 மணி நேரம் என்பதை பிறகு விளக்குகிறேன்) உழைப்புக்கு 100 ரூபாய் கூலி என்று ஒப்பந்தம் போட்டு வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், முடிவில், முதலாளிக்கு ஒரு பைசாவும் லாபமாக கிடைக்காது. எனவே, இதைக் கருத்தில் கொண்டே முதலாளிகள் தொழிலாளர்களிடம் முதலிலேயே 12 மணிநேரத்தை வேலைநேரமாக சொல்லி விடுகிறார்கள்.
எனவே, 8 மணிநேரத்திற்கான கூலியாக தொழிலாளி 100 ரூபாயைப் பெற்று கொள்கிறான், ஆனால், முதலாளிக்காக மேலும் 4 மணி நேரம் கூடுதலக வேலை செய்கிறான். அந்த நேரத்தில் உற்பத்தியாகும் மதிப்புதான் உபரி மதிப்பு ஆகும்.

நிலம், கட்டிடம், இயந்திரம், மூலப்பொருள் இவையெல்லாம் உபரியை தோற்றுவிக்காது என்பதால், அவர் ஒரு தொழிலாளியிடம் இருந்துதான் இதை அபகரிக்க முடியும்.
நரம்பும், சதையையும் கொண்ட ஒரு தொழிலாளியால்தான், உபரிமதிப்பைத் தோற்றுவிக்க முடியும்.

எனவே ஒரு தொழிலாளியின் உழைப்பு நேரத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. அவசியமான உழைப்பு நேரம் (இதன் மதிப்பை தொழிலாளி கூலியாக பெற்று விடுகிறார்)
2. உபரி உழைப்பு நேரம் (இதன் மதிப்பை முதலாளி அபகரித்துக் கொள்கிறார்)

இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது

No comments: