Monday, June 28, 2010

மாரிக்சியம் என்றால் என்ன? பகுதி-2 (வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்)

இயக்கவியல் பொருள் முதல் வாதம்:

பொருள்களில் ஏன் மாற்றம் வருகிறது?
இதற்கு இயக்கவியலை சற்று புரிந்து கொள்வது அவசியம்.

இயக்கவியலில் மூன்று முக்கியமான விதிகள் உண்டு
1. எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்.
2. அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்.
3. நிலை மறுப்பின் நிலை மறுப்பு.

இந்த மூன்று விதிகளும்,

1. இயற்கை
2. மனித சமுகம்
3. மனித சிந்தனை
மூன்றிற்கும் பொருந்தும்.

எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்

அண்டத்தில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன, அந்த மாற்றத்திற்கு காரணம் அதன் உள் முரண்பாடுகளே. முரண்பாடுகளின் இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று எதிர்க்கும், ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.

இயற்கையில், பகல் – இரவு, வெப்பம் – குளிர்
மனித சமூகத்தில், உற்பத்தி சாதனங்களும் – உற்பத்தி உறவுகளும்
மனித சிந்தனையில், நனவு மனம் – நனவிலி மனம்

அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்

எல்லாவற்றிலும் ஏற்படும் அளவு மாற்றம் வெளிப்படையாக தெரியாது, அளவு மாற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அது பண்பு மாற்றமாக மாறும்.

இயற்கையில், niiநீரை கொதிக்க வைக்கும் போது அதன் வெப்பநிலையில் ஏற்படுவது அளவு மாற்றம், 100 டிகிரியை தொட்டதும் நீர் ஆவியாவது பண்பு மாற்றம்.
மனித சமூகத்தில், அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் முதலாளித்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மனித சிந்தனையில், ஒரு செயலை சிந்தித்துக் கொண்டே (அளவு மாற்றம்) ஒரு கட்டத்தில் அதற்கான செயலில் ஈடுபடுவது. (பண்பு மாற்றம்)

நிலை மறுப்பின் நிலை மறுப்பு.

மாற்றத்தின் போது, எல்லாவற்றிலும் பழைய நிலையில் Uஉள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது.

இயற்கையில், விதையில் இருந்து செடி வரும்போது விதையில் இருந்து உயிர்த்தன்மையை எடுத்துக் கொண்டு விதையின் ஓடுகள் விலக்கப்படுகின்றன.
மனித சமூகத்தில், ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகம் வரும்போது பழைய சமூகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
மனித சிந்தனையில், தேவையானவற்றை மட்டும் கொண்டு மற்றவற்றை புறக்கனிப்பது.

இயக்கவியலின் கருத்தினங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும்.
2. காரணமும் விளைவும்.
3. இன்றியமயாமையும் தற்செயலும்.
4. சாத்தியமும் எதார்த்ததும்.
5. உள்ளடக்கமும் வடிவமும்.
6. சாராம்சமும் நிகழ்வும்.
இவை அனத்தும் இயக்கவியலின் கருத்தினங்கள் எனப்படும். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும்
அனைத்து அம்சங்களும் ஒன்றாக உள்ள இரண்டு பொருளோ, நிகழ்வோ இந்த உலகத்தில் இல்லை. அதே சமயத்தில், உலகத்தில் உள்ள எல்லா பொருள்களிலும், நிகழ்வுகளிலும் நிச்சயமாக பொதுவான அம்சம் என்றும் ஏதாவது இருக்கும். உதாரணமாக, இரும்பை எடுத்துக் கொள்வோம், உயிரற்ற பொருள் என்ற அடிப்படியில் அது பொதுவானது. உலோகம் என்ற முறையில் அது சிறப்பானது. இரும்பு என்ற முறையில் அது தனியானது. தனியானது, சிற்ப்பானது, பொதுவானது இவை ஒன்றுக்கொண்று பிரிக்க முடியாதது

2. காரணமும் விளைவும்
ஒரு நிகழ்வு இன்னொரு நிகழ்வுக்கு இட்டுச் சென்றால்,
அந்த முதல் நிகழ்வு காரணம் எனப்படும் இரண்டாவது நிகழ்வு விளைவு ஆகும்.

காரணம் இல்லாமல் விளைவுகள் இருக்கவே முடியாது

3. இன்றியமையாமையும் தற்செயலும்
ஒரு நிகழ்வின் உள்ளார்ந்த செயல் இன்றயமையாதது,
வெளிப்புற தாக்கம் தற்செயல் ஆகும்.

உ.ம்: ஒரு முதலாளி ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துவது இன்றியமையாதது,
ஆனால் அவர் யாரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது தற்செயலானது

4. சாத்தியமும் எதார்த்தமும்
தகுந்த நிலைமகளில் நடைபெறக்கூடியது சாத்தியம் எனப்படும்.
ஏற்கனவே நடைபெற்றிருப்பது எதார்த்தம் எனப்படும்.

எதார்த்தத்தை நிறைவேற்றப் பட்ட சாத்தியம் என்றும்.
சாத்தியத்தை எதிர்கால எதார்த்தம் என்றும் சொல்லலாம்.

5.உள்ளடக்கமும் வடிவமும்
வடிவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடியாதவை.
உள்ளடக்கம் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

முதலில் உள்ளடக்கம் மாறுகிறது, பிறகு அது அதற்கேற்ற வடிவத்தை பெறுகிறது.
புதிய வடிவம் உள்ளடக்கத்தை மாற்றுகிறது.

6. சாராம்சமும் நிகழ்வும்
ஒரு பொருளின் ஒட்டு மொத்த இயல்பும் சாராம்சம் எனப்படும்.
நிகழ்வு என்பது அதனால் ஏற்படும் வெளிப்பாடு ஆகும்.

லெனின் சாராம்சத்துக்கும், நிகழ்வுக்கும் இடையே உள்ள உறவை ஒரு ஆழமான வேகமான நீரோட்டத்துக்கு ஒப்பிட்டார்.
அதன் ஆழத்தையும் வேகத்தையும், கண்களுக்கு தெரிகின்ற அலைகளையும், நுரைகளையும் கொண்டுதான் மதிப்பிட முடியும் என்றார்.


வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்:

இயங்கியலின் கோட்பாடுகளை

இயற்கைக்கு பொருத்திப்பார்ப்பது - டார்வினியம்
சிந்தனைக்கு பொருத்திப்பார்ப்பது - பிராய்டியம்
மனித சமூகத்துக்கு பொருத்திப்பார்ப்பது - மார்க்சியம்

இங்கு நாம் மார்க்சியம் பற்றி பேசுவதால் அதைப் பற்றி மட்டும் எடுத்துக் கொள்வோம்.
மனித சமூகம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
அதன் திசை வழியை நாம் அறிய முடியுமா?
முடியும் என்கிறது மார்க்சியம்.

இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் முதலாளித்துவ சமூகம் உள்ளது,
ஆனால் ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் மன்னராட்சிதான் நடைபெற்றது
எப்படி இது மாறியது?
தனிப்பட்ட மனிதர்களது வீரதீர செயலாலா?
உயர்ந்த தத்துவங்களினாலா?
இல்லவே இல்லை...

இவற்றிற்கெல்லாம் முன்பு மனிதன் என்பவனுக்கு
உண்ண உண்வு வேண்டும், உடுக்க உடை வேண்டும், இருக்க இடம் வேண்டும்
இவற்றிற்காக உற்பத்தியில் ஈடுபட வேண்டும். (இந்த உண்மை மிக எளிமையானது, ஆனால் புரிந்து கொள்ளப்படாதது.)

எனவே உற்பத்திமுறைதான் சமூகத்தின் வடிவத்தை தீர்மானிக்கிறது...
ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் ஆய்வு செய்தால், அந்த சமூகத்தின் வடிவத்தை புரிந்துகொள்ளலாம்


இயக்க விதிகளை மனித சமூக வரலாற்றுக்கு பொருத்தி பார்ப்பதுதான், வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனப்படும்.

இதற்கு மார்க்ஸ் எடுத்துக் கொண்ட சமூக வரலாறு,
ஐரோப்பிய சமூக வரலாறு
1. ஆதி பொதுவுடைமை சமூகம்
2. அடிமைச் சமூகம்
3. நிலபிரபுத்துவ சமூகம்
4. முதலாளித்துவ சமூகம்

இந்த நான்கு சமூகமும் இயக்கவிதிகளுக்கு உட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்று மாறி வந்துள்ளது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்.

ஒவ்வொரு சமூகமும் அதன் உள் முரன்பாடுகளால் (இயக்கவியலின் முதல் விதி) வளர்கின்றன, அதில் ஏற்ப்படும் அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் பண்பு மாற்றங்களை (இயக்கவியலின் இரண்டாவது விதி) ஏற்படுத்துகின்றன, படைக்கப்பட்ட புதிய சமூகம், பழைய சமூகத்தில் இருந்து தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்கி விடுகின்றன. இயக்கவியலின் மூன்றாம் விதி).

மனிதன் தோன்றிய போது

மனிதனுக்கு மனிதன் சுரண்டல் இல்லை (சுரண்டல் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),
வர்க்கம் இல்லை (வர்க்கம் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),
அரசு இல்லை,
போலீஸ் இல்லை,
ரானுவம் இல்லை,
குடும்ப அமைப்பு இல்லை,
அவ்வளவு ஏன், பொதுவுடைமை சிந்தனையும் இல்லை, ஆனாலும் அன்று
நம்மால் விரும்பப்படுகிற,
வருங்காலத்தில் வர இருக்கிற,
ஏற்கனவே ருஷ்யாவில் சோதித்தறியப்பட்ட,
பொதுவுடைமை சமுதாயம் நிலவியது என்றால் எப்படி?
அதன் உற்பத்தி முறைதான் காரணம்....

அதாவது, ஆதிமனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதல், சிங்கத்தை வேட்டையாட வேண்டும் என்றால் கல்லெரிந்துதான் கொல்ல வேண்டும்
(அன்றைய உற்பத்திசக்திகளின் வளர்ச்சி அவ்வளவுதான்) ஒருவர் மட்டும் கல்லெரிந்து சிங்கத்தை கொல்ல முடியாது, சிங்கம் இவரை கொன்று விடும்

எனவே, இருத்தலின் பொருட்டு (தான் உயிர் வாழ்தல் பொருட்டு), மனிதன் கூட்டமாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.
கூட்டமாக வேட்டையாடுவது, அனைவரும் பகிர்ந்து உண்ணுவது. இதுவே ஆதிபொதுவுடைமை சமூகத்தின் நிலையாகும்.
இதற்கு காரணம் உற்பத்தி சக்த்திகளும்(வெறும் கல்லுதாங்க), உற்பத்தி உறவுகளும்தான்

(கல்லு எல்லருக்கும் சொந்தமுங்க, இது என் கல்லு, இது உன் கல்லு ன்னு யாரும் அப்ப சண்ட போட்டுக்கல)

சரி, இந்த ஆதிபொதுவுடைமை சமூகம் மறைந்து எப்படி அடிமை சமூகம் வந்தது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?

இங்குதான் இயங்கியலின் மூன்று விதிகள் நமக்கு பயன்படுகின்றன.

முதல் விதி: முரன்பாடு (எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராடமும்)
ஆதிபொதுவடைமை சமூகத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் முரன்பாடு
மனிதன் இயற்கையோடு இடையறாது போராடினான் (உயிர் வாழ்தல் பொருட்டுதான்)
விளைவு: உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி அடைந்தன (கல்லு கோடரி ஆச்சு, கோடரி ஈட்டி ஆச்சு, ஈட்டி வில் அம்பு ஆச்சு)
உற்பத்தி சக்திகளில் ஏற்படும் இந்த வளர்ச்சிதான்(இரண்டாவது விதி:அளவு மாற்றம்), ஒரு புதிய சமூக அமைப்புக்கு காரணமாக (பண்பு மாற்றமாகிறது) அமைகிறது (வரலாற்றில் இது தவிர்க்க முடியாதது)
நூறு பேர் சேர்ந்து செய்த வேலையை, உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியால் ஒருவர் மட்டுமே செய்ய முடிந்தது என்பது வர்க்க பிரிவினைக்கு வழிவகுத்தது.
வேட்டையாடுதல் என்ற தொழிலில் இருந்து முதல் உழைப்பு பிரிவினையான கைவினைத்தொழில் தோன்றியது (கோடரி, ஈட்டி செய்தல்).
கைவினைத்தொழில் செய்வோருக்கும் சேர்த்து மற்றவர்கள் வேட்டையாடினர்
காலப்போக்கில் கைவினைப்பிரிவினர் தொழிலில் தேர்ச்சி அடைந்தனர், அவர்களின் சிந்தனை சக்தியும் வளர்ந்தது.
உற்பத்தியும் பெருகியது, மிகையான உற்பத்தியை ஒரு குழு இன்னொரு குழுவிடம் பறிமாறிக்கொண்டது,

இப்படியாக ஒரு பிரிவு மக்கள் தீவிர உழைப்பில் இருந்து விடுபட்டனர்.
இவர்கள் ஆண்டைகள் ஆயினர், உழைக்கும் மக்கள் அடிமைகள் ஆயினர். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் நடக்கும், சண்டையில் தோற்றவர்களில்
ஆன்கள் கொலைசெய்யப்பட்டனர், பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் (இனப்பெருக்கத்திற்காக).

ஒரு புதிய சமூக வடிவம் தோன்றியது. இதுவே அடிமைச் சமூகம் எனப்படும்.

அடிமைச் சமூகம்:

இதன் வளர்ச்சிக்கு காரணம் அதன் முதன்மை முரன்பாடான ஆண்டைகளும் அடிமைகளும் தான்(முதல் விதி)
அடிமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் (அளவு மாற்றம்), அதன் புரட்சிக்கு (பண்பு மாற்றத்திற்கு) வழிவகுக்கிறது.
அடிமை சமூகத்தில் ஒரு பிரிவு மக்கள் உழைப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு கலை, இலக்கியம், தத்துவம், என்ற இன்ன பிற துறைகளை வளர்த்தனர்.(மூன்றாவது விதி: நிலைமறுப்பின் நிலைமறுப்பு)

சாக்ரடீஸ் மிக சிறந்த சிந்தனையாளர்தான் ஆனால், அவர் அடிமை சமூகத்தை ஆதரித்தவர், "அடிமைகள் இல்லாமல் சமூகம் எப்படி இயங்கும் என்று கேட்டவர்"
அந்த சூழல் அவரை அதற்கு மேல் சிந்திக்க விட வில்லை என்பதே உண்மை (பொருளில் இருந்துதான் சிந்தனை வருகிறது என்பதை இங்கு நினைவுகூர்க)

இங்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முழுமையாக விற்கப்படுகிறான்.
அடிமையின் ஆற்றல், உழைப்பு, திறமை அனைத்தும் அவரை வாங்கிய ஆண்டைக்கே சொந்தமாகும்.
அடிமைக்கு என்று எதுவும் சொந்தம் இல்லை
அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு வழிவகுத்தது.

நிலப்பிரபுத்துவ சமூகம்:

இங்கு பண்ணயடிமைகள் தங்களுக்கான நிலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்.
மீதி மூன்று நாள் நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். (அதாவது விளைவதில் பாதி தனக்கு, மீதி நிலப்பிரவுக்கு)
இங்கு பண்னை அடிமை என்பவன் நிலத்தோடு பினைக்கப்பட்டவன்
நிலம் விற்கப்படும் போது நிலத்தோடு அவனும் விற்கப்படுவான். எனவே பண்ணை அடிமையை கொல்லும் அதிகாரம் நிலப்பிரபுவுக்கு கிடையாது.
(அடிமை சமூகத்தில் அடிமையை ஆண்டை கொல்லலாம்!).
எனவே பண்ணையடிமை அரை அடிமை ஆவான்.

இந்த விதத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் என்பது, அடிமை சமூகத்தை விட முற்போக்கானது.
18ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ முறையே நிலவியது எனலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்படதுதான் (உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிதான்), சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. நீராவி இயந்திரங்களை சொந்தமாக கொண்டவர்கள், உற்பத்தியின் துரித வளர்ச்சிக்காக நிலப்பிரபுக்களோடு சண்டையிட்டனர். துனைக்கு பண்ணையடிமகளையும் அழைத்துக்கொண்டனர்.
இயந்திரங்களை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது அப்பொழுதுதான்.
அது முதலாளி வர்க்கம் எனப்பட்டது.

(அடிமை சமூகத்தில் அடிமைகள்தான் செல்வம், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம்தான் செல்வம்).

நிலத்தில் கலப்பபையை மட்டுமே பயன்படுத்த தெரிந்த பண்ணையடிமைகளுக்கு, கல்வி கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு இருந்தது.

ஏனெனில் அப்பொழுதுதான் அவர் ஸ்பேனர் பிடித்து இயந்திரங்களில் வேலை செய்ய முடியும், பண்ணையடிமகளின் உதவியோடு, நிலப்பிரபுக்களை வீழ்த்தி முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இதுவே பிரெஞ்சு புரட்சியாகும். (கூடுதல் தகவலாக, நிலபிரபுக்களையும், முதலாளிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியது லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி)

எனவே பண்ணையடிமை என்பவன் இப்பொழுது ஒரு சுதந்திர தொழிலாளி ஆகிறான்.
ஆனால் இந்த தொழிலாளி இரண்டு வகையிதான் சுதந்திரம் உள்ளவன்.
1. ஒரு தொழிலாளி உழைக்கலாம் அல்லது உழைக்காமல் பட்டினி கிடந்து சாகலாம், இந்த சுதந்திரம் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பன்ணையடிமையோ உழைத்தேயாக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்)
2. ஒரு தொழிலாளி எந்த முதலாளியிடம் வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம், இந்த சுதந்திரனும் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பண்ணையடிமையோ முதலாளியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாதவர்கள்.)

எனவே உற்பத்தி சாதனங்களை (இயந்திரங்களை) சொந்தமாக கொண்ட ஒரு (முதலாளி) வர்க்கம், உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத ஒரு (தொழிலாளி) வர்க்கத்தை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு சமூக அமைப்புதான் முதலாளித்துவ சமூக அமைப்பு எனப்படும்.
சமுதாயத்தின் பொருளுற்பத்திமுறைதான் அதன் அடிக்கட்டுமானம், கடவுள், மதம், நம்பிக்கை, அரசு, ராணுவம், தத்துவங்கள், இதெல்லாம் அதன் மேல் கட்டுமானங்கள்,

எனவே இன்றைய கட்டதில், அமைந்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்து, இயக்க விதிகளை பொருத்திப் பார்ப்பதன் மூலம் அடுத்து அமையப்போகும் சமூகத்தை நாம் முன்னறிவிக்க முடியும்.
அதற்கு நாம் பயில வேண்fடியது மார்க்சிய பொருளியல்.

-தொடரும்.

1 comment:

Unknown said...

Miga elimaiyaai , arputhamaai eluthureenga... Nandri