Monday, June 28, 2010

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-5 (உபரி மதிப்பு கோட்பாடு)

இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது

நம்முடைய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்
இதில் இரண்டு வழி முறைகள் உள்ளன, முதலாளித்துவ வழிமுறை, மார்க்சிய வழிமுறை
முதலில் முதலாளித்துவ வழிமுறையைப் பார்ப்போம்

நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
கூலி (12 மணிநேர உழைப்புக்கு) = 100 ரூபாய்

இவற்றில் நிலம், கட்டிடம், இயந்திரம் ஆகியவை நிலைத்த மூலதனம் என்றும், மின்சார செலவு, மூலப் பொருள், கூலி ஆகியவை சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்படுகிறது.

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மொத்த மூலதனம்) X 100
8 மணிநேர உழைபுக்கு 100 ரூபாய் கூலி என்றால், 12 மணிநேரத்துக்கு 150 ரூபாய் ஆகும்.

எனவே உபரி உழைப்பின் மதிப்பு 50 ரூபாய் ஆகிறது.
உபரி மதிப்பின் வீதம் = (50/230)X100 = 21.73% ~ 20% ஆகிறது.
முதலாளித்துவ சமூகம் உபரிமதிப்பை இப்படிதான் கணக்கிடுகிறது.

ஆனால் மார்க்ஸ் இது தவறு என்று நிரூபிக்கிறார்: எப்படி

மார்க்சிய வழிமுறை

உபரி மதிப்பை கணக்கிடும் போது எந்த மூலதனம் உபரியை தருகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மொத்த மூலதனத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதாவது மார்க்ஸ் மூலதனத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்

நிலம், கட்டிடம், இயந்திரம், மின்சார செலவு, மூலப்பொருள் இவை எல்லாம் உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை என்பதால் இவை மாறா மூலதனம் எனப்படுகிறது.

கூலி மட்டுமே உபரி மதிப்பைத் தோற்றுவிப்பதால், அது மட்டுமே மாறும் மூலதனம் ஆகும். இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மாறும் மூலதனம்) X 100
உபரி மதிப்பின் வீதம் = (50 / 100) X 100 = 50%

எனவே முதலாளித்துவ அறிஞர்கள் சொல்வது போல, உபரி மதிப்பின் வீதம் 20% அல்ல, அது 50% என்பதை மார்க்ஸ் நிரூபிக்கிறார்.

8 மணிநேர உழைப்புக்கான கூலியை பெற்றுக் கொண்டு ஒரு தொழிலாளி 12 மணிநேரம் உழைக்கிறார். கூடுதலான அந்த 4 மணிநேர உழைப்பின் மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்கிறார். ஏன்,

உற்பத்திசாதனங்கள் (நிலம், கட்டிடம், இயந்திரம்) எல்லாம் முதலாளிக்கு சொந்தமாக இருக்கிறது.
தொழிலாளிக்கு தன்னுடைய உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவுமே சொந்தமாக இல்லை.
இதனாலேயே, உபரி மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. இயந்திரம், கட்டிடம் எல்லாம் வானத்தில் இருந்து வந்தவை அல்ல, அதுவும் தொழிலாளர்களின் உழைப்புதான். இதைதான் மார்க்ஸ் இறந்த கால உழைப்பின் மீது நிகழ்கால உழைப்பு வினை புரிகிறது என்றார்.

(உற்பத்தி சாதனங்கள் எல்லாம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி சொந்தமானது என்பது தனி வரலாறு.)

நம்முடைய உதாரணத்தில் 270 ரூபாய் மதிப்புக்கொண்ட நூலை 230 ரூபாய்க்கே தயாரித்துவிடுகிறார் அந்த முதலாளி. அதில் 50 ரூபாய் உபரிமதிப்பு என்று ஆகிறது.
250 ரூபாய்க்கு மொத்த வியாபாரியிடம் விற்று 30 ரூபாயை தான் எடுத்துக்கொள்கிறார்.
மொத்தவியாபாரி, 260 ரூபாய்க்கு சில்லறைவியாபாரியிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.

சில்லறைவியாபாரி, அதன் உண்மை மதிப்பான 270 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.
இப்படியாக ஒரு தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட உபரிமதிப்பை, இந்த சமூகம் பலவாறாக தனக்குள் பிரித்துக்கொள்கிறது.

இவ்ளோதாங்க உபரி மதிப்புக் கோட்பாடுங்கறது.

இப்பொழுது மூலதனம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
50 ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக்கொண்ட அந்த முதலாளி, அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தன்னுடைய தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால்
அந்த 10 ரூபாய் தான் மூலதனம் எனப்படும்.
உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த பகுதியே மூலதனம் எனப்படும்.

மூலதனம் உபரிமதிப்பை தோற்றுவிக்கும்,
உபரி மதிப்பு மூலதனத்தை பெருக்கமடைய செய்யும்.

மூலதனமும், உபரிமதிப்பும், இரண்டு எதிர் எதிர் கூறுகள் (இயங்கியலின் முதல் விதியான ‘எதிர்கூறுகளின் ஒற்றுமையும், போராட்டமும்’ என்ற விதியை இங்கு நினைகூர்க)

கூலியையும், உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளியும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டார்கள்.

பிரச்சனையின் தீர்வாக, இருவரும் அதை (கூலியயும், உபரி மதிப்பையும்) நியாயமான முறையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் கூறினார்கள்.

முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில் கண்டார்களோ, அதே இடத்தில்தான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிரூபித்தார்.

முலதனத்துக்கும், உபரி மதிப்புக்கும் உள்ள இந்த முரண்பாட்டால், முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் அளவு மாற்றம் எப்படி இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.

முதலாளி உபரி மதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1. கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
2. அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது

கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளின் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது. தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.

உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு, அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.

எனவே முதலாளிகள் இரண்டாவது வழியை பின்பற்ற ஆரம்பித்தார்கள்

அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.
நம்முடைய உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மனி நேரம் என்று பார்த்தோம். அதாவது 230 ரூபய் மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பத்தின் காரணமாக அதே 230 ரூபய் மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
என்ன ஆகும்?

இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.
ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் இருந்தது,

இப்பொழுது அவசியமான உழைப்பு நேரம் 4 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 8 மணி நேரம் என்றும் ஆகிறது.

ஒரு பொருளின் மதிப்பு உழைப்பின் கால அளவை பொருத்தது என்று ஏற்கனவே பார்த்தோம்.
8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும். எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள். தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள். எல்லா முதலாளிகளும் அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால், அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும், பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.

எனவே முதலாளித்துவம், சுய லாபத்திற்காக தொழில் நுட்ப வளர்சியை துரிதப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது,

எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலேயும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறுவதற்கு காரணம் இதுதான்.

தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது, எனவே மூலதனமும் அதிகமாகிறது.

மூதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது. எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒருசில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெரு முதலாளிகள் ஆகின்றனர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து விடுகிறார்.

பாட்டாளிகள் பெருக பெருக அவர்கள் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு புரட்சி செய்யும் போது, சமூக மாற்றம் ஏற்படும், அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.

1 comment:

superlinks said...

வணக்கம்,
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

நன்றி!